ஆண்டவரின் திருமுழுக்கு விழா
ஜனவரி 12, 2020
திருப்பலி முன்னுரை:

அன்புக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு விழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளின் பிள்ளைகளாக ஆகியிருக்கிறோம் என்பதை உணர இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமகன் இயேசு இந்த உலக வரலாற்றில் தோன்றி, மானிடரான நாம் செய்ய வேண்டியவற்றை தமது எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் நமக்கு கற்பித்தார். தூய ஆவியின் அருளைப் பெற்று கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழுமாறு, திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கிறோம். கிறிஸ்து இயேசுவைப் போன்று இறைத்தந்தையின் திருவுளத்திற்கு நம்மை முழுமையாக கையளிக்கும் மனம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

அன்புக்குரியவர்களே, ஆண்டவர் தேர்ந்துகொண்ட ஊழியர் பற்றிய எசாயாவின் இறைவாக்கை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. அவர் ஆண்டவரின் ஆவியால் நிரப்பப்பட்டு, உலகெங்கும் நீதியை நிலைநாட்டுவார் என்று எசாயா இறைவாக்கு உரைக்கிறார். மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் அவர் இருப்பார் என்பதும் முன்னறிவிக்கப்படுகிறது. இயேசுவின் திருமுழுக்கில் நிறைவேறிய இந்த இறைவாக்குகள், நமது வாழ்விலும் நிறைவு காண வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அன்புக்குரியவர்களே, திருமுழுக்கு பெறுவதற்காக கூடியிருந்த கொர்னேலியு குடும்பத்தினருக்கு திருத்தூதர் பேதுரு ஆற்றிய உரையை இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. இயேசு திருமுழுக்கின் வழியாக தூய ஆவியின் வல்லமையைப் பெற்றுக் கொண்டார் என்று பேதுரு எடுத்துரைக்கிறார். அலகையின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட அனைவரையும் விடுவித்து, இயேசு நன்மை செய்து கொண்டே சென்றதற்கு அவர் சான்று பகர்கின்றார். இயேசு கிறிஸ்துவைப் போன்று, நாமும் திருமுழுக்கில் பெற்ற தூய ஆவியின் வல்லமையால் பிறருக்கு நன்மை செய்வோராய் வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. எல்லாம் வல்லவரே இறைவா, எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும், திருச்சபையின் மக்களை உமது ஊழியர்களாகத் தயார் செய்யத் தேவையான அருளைப் பொழியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. மாட்சியின் ஆண்டவரே இறைவா, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உமது மேலான மாட்சியை அறிந்து, மக்களைத் துன்பங்களில் இருந்து விடுவிக்கத் தேவையான ஆற்றலை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆவியைப் பொழிபவரே இறைவா, திருச்சபையின் அரவணைப்பில் இருந்து விலகி வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரையும் மனந்திருப்பி, திருமுழுக்கின் வழியாக உமது பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. தூய்மை செய்கிறவரே இறைவா, தன்னலம், வெறுப்பு, பகைமை, அநீதி, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்ற்றால் கறை படிந்திருக்கும் இந்த உலகை, உமது அருளாலும் அன்பாலும் தூய்மைப்படுத்தி உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. திருமுழுக்கில் அழைத்தவரே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, அனைவருக்கும் நன்மை செய்வோராய்த் திகழ வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.