இறையியல்
இறைத்தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் நித்தியத்திற்கும் புறப்படுகிறவராக இருப்பதால் மூவொரு கடவுளின் மூன்றாம் ஆளை ‘தூய ஆவியார்’ என்று அழைக்கிறோம். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார்.படைப்புகளுக்கு இயக்கம் அளிக்கும் வகையில் தொடக்கத்தில் அசைவாடிக் கொண்டிருந்தவர் இவரே. இஸ்ரயேல் மக்களின் நடுவே தோன்றிய இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே. கன்னி மரியாவின் வயிற்றில் இறைமகன் கருவாக காரணமான இவர், கிறிஸ்துவின் திருச்சபையை உருவாக்கி வழிநடத்தி வருகிறார்.
வெளிப்பாடு
“உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்” (யோவான் 14:16,17) என்று இயேசு கூறுவதன் மூலம், தூய ஆவியாரின் புறப்பாடு குறித்த புரிதல் கிடைக்கிறது. அதாவது, தந்தையிடம் கேட்பதன் வழியாக மகனும் தூய ஆவியாரை அனுப்புகிறார். ஆகவே, தந்தையிடம் இருந்து மட்டுமல்ல, மகனிடமிருந்தும் தூய ஆவியார் புறப்படுகிறார் என்று நாம் நம்புகிறோம்.
வரலாற்றில்
விவிலியத்தின் தொடக்கத்திலேயே தூய ஆவியாரின் செயல்பாட்டைக் காண்கிறோம்: “நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” (தொடக்க நூல் 2:2). இஸ்ரயேலின் இறைவாக்கினர்களில் தூய ஆவியார் செயலாற்றியதையும் பழைய ஏற்பாடு எடுத்துரைக்கிறது: “ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்” (எண்ணிக்கை 11:25). “நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்” (யோவேல் 2:28) என்ற கடவுளின் வாக்குறுதியையும் அதில் காண்கிறோம்.தூய ஆவியாரின் வல்லைமையாலே கன்னி மரியா இறைமகன் இயேசுவைக் கருத்தாங்கினார் (லூக்கா 1:35). இயேசு திருமுழுக்கு பெற்றபோது புறா வடிவில் அவர்மீது இறங்கி வந்த தூய ஆவியார் (மாற்கு 1:10), அவரது இறையாட்சி பணியில் துணை நின்றார். உயிர்த்த இயேசு, தம் சீடர்களுக்கு தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தார் (லூக்கா 24:49). இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, திருத்தூதர்கள் மீது நெருப்பு நாவு வடிவில் இறங்கி வந்த தூய ஆவியாரின் (திருத்தூதர் பணிகள் 2:4) செயலால் திருச்சபை தோன்றி வளர்ந்தது. இன்றும் தூய ஆவியாரே திருச்சபையை வழிநடத்தி வருகிறார்.
விளக்கம்
இறை சிந்தனையாகிய தந்தையில் இறை வாக்காகிய மகன் இருப்பது, இறை செயலாகிய தூய ஆவியாரால் நிகழ்கிறது. ஆகவேதான், தந்தை மற்றும் மகனைப் பிணைக்கும் அன்பு என்று நாம் அவரை அழைக்கிறோம். சிந்தனையால் செயல் தூண்டப் பெறுவது போன்றே, இறை சிந்தனையாகிய தந்தையின் அசைவூட்டலால் இறை செயலான தூய ஆவியார் புறப்படுகிறார். இறை வாக்காகிய மகன், இறை சிந்தனையாகிய தந்தையிடம் இருந்து இறை செயலாகிய தூய ஆவியாரை புறப்படச் செய்கிறார். ஆகவே, தூய ஆவியாரின் புறப்பாட்டுக்கு தந்தை, மகன் இருவருமே காரணமாக இருக்கின்றனர்.சிந்தனையில் இருந்து சொல் பிறப்பது ஒரு செயலாக இருப்பது போன்றே, இறை சிந்தனையாகிய தந்தையிடம் இருந்து இறை வாக்காகிய மகன் பிறப்பது இறை செயலாகிய தூய ஆவியாரால் நிகழ்கிறது. ஆகவே, தந்தையாம் கடவுள் இறைமகனை உலகிற்கு அனுப்ப தூய ஆவியாரின் வல்லமை தேவைப்பட்டது. ஏனெனில், தூய ஆவியார் என்ற இறை செயல் இல்லாமல், இறை சிந்தனையாகிய தந்தையால் இறை வாக்காகிய மகன் அனுப்பப்படுவதும், இறை வாக்கு உடலெடுத்து மனிதராவதும் இயலாத காரியம். இயேசுவின் வாழ்வில் தூய ஆவியார் செயலாற்றியதன் காரணமும் இதுவே.
துணையாளர்
இறை செயலாகிய தூய ஆவியார் வாழ்வு அளிக்கிறவராகவும், புனிதப்படுத்துகிறவராகவும் இருக்கிறார். இறை சிந்தனையாகிய தந்தையில் தோன்றி இறை வாக்காகிய மகனில் வெளிப்படும் திட்டங்கள் அனைத்தும் தூய ஆவியாராலேயே நிறைவைக் காண்கின்றன. புறா, நெருப்பு நாவு, நீர், காற்று, மேகம் ஆகியவை தூய ஆவியாரை அடையாளப்படுத்தும் உருவங்கள் ஆகும். அவர் தமது கொடைகள், கனிகள் மற்றும் வரங்களை வழங்கி கிறிஸ்தவர்களின் வாழ்வில் துணையாளராக திகழ்கிறார்.ஏழு கொடைகள்: “ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு (இறைப்பற்று, இறையச்சம்)” (எசாயா 11:2).
பன்னிரண்டு கனிகள்: “அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்” (கலாத்தியர் 5:22-23), பணிவு, தாராளம், கற்பு.
ஒன்பது வரங்கள்: “ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு செறிந்த சொல்வளம், நம்பிக்கை[யை வெளிப்படுத்தல்], பிணி தீர்க்கும் அருள்கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், பரவசப் பேச்சை விளக்கும் ஆற்றல்” (1கொரிந்தியர் 12:8-10).