கிறிஸ்து பிறப்பு பெருவிழா
டிசம்பர் 25, 2019
திருப்பலி முன்னுரை:

“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!”

அன்பார்ந்தவர்களே, கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வோடு வரவேற்கிறோம். ரோமப் பேரரசை அகுஸ்து சீசர் ஆட்சி செய்த காலத்தில், கன்னி மரியாவின் மகனாக ஆண்டவர் இயேசு பிறந்த வரலாற்று நிகழ்வை இன்று நாம் கொண்டாடுகிறோம். விண்ணுலகும் மண்ணுலகும் களிகூரட்டும். தாவீதின் ஊரில் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். சாவின் நிழல் சூழ்ந்த மனித குலத்தின் மேல் சுடரொளியாக ஆண்டவர் உதித்துள்ளார். விண்ணக உணவாகிய இயேசு, இதோ தீவனத் தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடத்தப்பட்டுள்ளார். இறைமகன் வழியாக மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்ட மாபெரும் தருணத்தை மனதில் இருத்தி அக்களிக்க அழைக்கப்படுகிறோம். நமது மீட்புக்காக விண்ணகத்தில் இருந்து மண்ணகம் இறங்கிய ஆண்டவர் இயேசு வழியாக நிலைவாழ்வின் பேரின்பத்தைப் பெற்றுக்கொள்ள வரம் கேட்டு, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. மாட்சியின் மன்னரே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இவ்வுலகில் வெளிப்பட்ட மாட்சியின் உண்மையான சாட்சிகளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியின் அரசரே இறைவா, உம் திருமகன் இயேசு பிறந்த வேளையில் வானதூதர்களால் அறிவிக்கப்பட்ட அமைதியை, மக்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் உழைக்கும் மனத்தை, உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மகிழ்ச்சியின் வேந்தரே இறைவா, உம் திருமகனின் பிறப்பைக் கொண்டாடும் ஒவ்வொருவரும், உறவிலும் நட்பிலும் வளர்ந்து உள்ளத்தில் மகிழ்ச்சியைக் கண்டடையத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. மீட்பளிக்கும் ஆண்டவரே இறைவா, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு காரணங்களால் துன்பத்தின் இருளில் சிக்கியுள்ள மக்கள் அனைவரும், உம் திருமகன் கொணர்ந்த மீட்பின் ஒளியைக் கண்டடைய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வளிக்கும் தலைவரே இறைவா, இத்திருப்பலியில் பங்கு பெற்றுள்ள அனைவரும், கிறிஸ்து பிறப்பு விழாவின் மகிழ்ச்சியை மற்ற மக்களிடமும் கொண்டு சேர்க்கவும், அதன் வழியாக உலகெங்கும் உமது ஆட்சி நிறுவப்படவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.