திருக்குடும்ப விழா
டிசம்பர் 29, 2019
திருப்பலி முன்னுரை:

அன்புக்குரியவர்களே, திருக்குடும்ப விழா திருப்பலிக்கு உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். யோசேப்பும் மரியாவும் எவ்வாறு இயேசுவின் பொறுப்புள்ள பெற்றோராக வாழ்ந்தார்கள் என்பதை சிந்திக்க இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்மை வளர்த்து ஆளாக்கியப் பெற்றோருக்கு மதிப்பளித்து, முதிர்ந்த வயதில் அன்போடு பணிவிடை செய்ய வேண்டிய கடமையையும் நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பத்தைப் பின்பற்றி, நமது குடும்பங்கள் கடவுளுக்கு உகந்தவையாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

அன்புக்குரியவர்களே, பிள்ளைகளை விடவும் பெற்றோருக்கு ஆண்டவர் முதலிடம் வழங்கியுள்ளார் என்பதை உணர இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. தந்தைக்கு மேன்மை வழங்குகிறவர் நெடுநாள் வாழ்வார், தாயை மேன்மைப்படுத்துகிறவர் செல்வம் திரட்டுவோருக்கு ஒப்பாவர் என்று சீராக்கின் ஞானம் கூறுகிறது. பெற்றோரை மதித்து நடந்து கடவுளின் ஆசியையும் அருளையும் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அன்புக்குரியவர்களே, கடவுளின் பிள்ளைகள் அனைவரும் கொண்டிருக்க வேண்டிய நற்பண்புகள் குறித்து இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல் எடுத்துரைக்கிறார். குடும்பத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையை வழங்குகிறார். அன்பு, மன்னிப்பு, பரிவு, இரக்கம், தாழ்ச்சி, கனிவு, பொறுமை ஆகியவற்றால் நமது வாழ்வு அணி செய்யப்பட வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. விண்ணகத் தந்தையே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மண்ணகத்தில் வாழ்வோரை உமக்கு உகந்த இறைமக்களாக வழிநடத்தும் ஆற்றலை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. பரிவுள்ள தந்தையே இறைவா, பொருளாதார போட்டிகளாலும் தன்னல நாட்டங்களாலும் இந்த உலகத்தின் இயற்கைச் சூழலை சிதைத்து வருவோருக்கு நல்லதொரு மனமாற்றம் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அரவணைக்கும் தந்தையே இறைவா, சமூகச் சீர்கேடுகளால் சிதைந்து போயுள்ள குடும்ப உறவுகள் சீரடையவும் புரிந்துகொள்தல் மற்றும் விட்டுக்கொடுத்தலில் புதுவாழ்வு காணவும் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்விக்கும் தந்தையே இறைவா, மொழி, இனம், சமயம் ஆகியவற்றின் வேறுபாடுகள் அகன்று, மக்களிடையே சமத்துவமும் சகோதரத்துவமும் வளர்ச்சி காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்புள்ள தந்தையே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மில் மகிழ்ந்திருக்கவும் ஒரே குடும்பமாய் உறவில் வளரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.