ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
ஜனவரி 5, 2020
திருப்பலி முன்னுரை:

அன்பார்ந்தவர்களே, ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உலக செல்வங்களை விட மேலான செல்வமாகிய இறைவனில் மகிழ்ச்சி காண இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. யூதர்கள் அறிந்துகொள்ளாத அரசர் இயேசுவின் பிறப்பை, விண்மீனின் அடையாளத்தைக் கொண்டு கீழ்த்திசை ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள். உம் திருமகன் இயேசுவின் மேன்மையை உணர்ந்தவர்களாய் அவரைக் கண்டு வணங்கச் செல்கிறார்கள். அனைத்துலகின் அரசராம் இறைவனே, மனிதராக பிறந்திருப்பதை அறிந்து அவருக்கு பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாக அளிக்கிறார்கள். அந்த ஞானிகளைப் போன்றே, நாமும் அனைத்துக்கும் மேலாக ஆண்டவருக்குப் பணிவிடை செய்யும் மனநிலையைப் பெற்று வாழும் வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

அன்பார்ந்தவர்களே, ஆண்டவரின் பெயரால் எருசலேம் மாட்சி அடைய இருப்பதைப் பற்றிய இறைவாக்கினை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. இவ்வுலகின் மக்களினங்களை இருள் கவ்வினாலும், ஆண்டவரின் மாட்சிமிகு ஒளியால் எருசலேம் நிரப்பப்படும் என்று எசாயா இறைவாக்கு உரைக்கிறார். பொன்னும் நறுமணப் பொருளும் ஏந்தி வரும் பிற இனத்தவர் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர் என்பது முன்னறிவிக்கப்படுகிறது. உலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆண்டவரை அறிந்து, அவரைப் புகழ்ந்தேற்றும் நாள் விரைவில் மலர வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அன்பார்ந்தவர்களே, ஆண்டவரின் மறைபொருள் பற்றிய இறைவெளிப்பாட்டைக் குறித்து இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் எடுத்துரைக்கிறார். ஆண்டவரைப் பற்றிய மறைபொருள் அனைவருக்கும் வெளிப்படுத்தப்படாமல், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மட் டுமே வெளிப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நற்செய்தி வழியாக பிற இஸ்ரயேலர் அல்லாத இனத்தவரும் இறைவனின் வாக்குறுதிகளுக்கு பங்காளிகள் ஆகியிருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் நற்செய்தியை உலக மக்கள் அனைவரும் விரைவில் அறிந்துகொள்ள வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. உலகின் நற்செய்தியே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறைமகன் இயேசுவில் வெளிப்பட்ட உமது மாட்சியின் நற்செய்திக்கு சான்றுபகர்பவர்களாக திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாட்சிமிகு மன்னரே இறைவா, உலக நாடுகள் அனைத்திலும் உமது நல்லாட்சி மலரவும், மக்கள் அனைவரும் உமது திருச்சபையின் வழியாக உம்மை அறிந்துகொள்ளவும் தேவையான உதவிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உன்னத ஒளியே இறைவா, எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை ஒளியாகிய உம்மை நாடித் தேடவும், அதன்வழி இருளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு ஆன்மிக வாழ்வில் முன்னேறவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சியின் நிறைவே இறைவா, நிலையற்ற இந்த உலகின் செல்வங்களைத் தேடி மன நிம்மதியை இழந்து நிற்கும் மக்கள் அனைவரும், நிலையான செல்வமாகிய உம்மில் நிம்மதியைக் கண்டடைய அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மேன்மை மிகுந்தவரே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், கீழ்த்திசை ஞானிகளைப் போன்று, நீர் வெளிப்படுத்தும் மறைபொருளை உணர்ந்து வாழும் வரத்தை பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.