கிறிஸ்து அரசர் பெருவிழா
திருப்பலி முன்னுரை:

இறையாட்சிக்குரியவர்களே, கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். என்றென்றும் ஆட்சி செய்பவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத்தன்மையைப் பற்றி சிந்திக்க இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு ஆட்சியுரிமையுடன் வரும்போது நம்மை நினைவில் கொள்வதற்குத் தகுதி உள்ளவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு அனைத்துலகின் அரசர் என்பதை நல்லக் கள்வன் அறிக்கையிடுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. ஒரு குற்றமும் செய்யாத இறைமகன் இயேசு, நமது மீட்புக்காக சிலுவையின் கொடிய வேதனையை ஏற்றுக்கொண்டார். இத்தகைய இரக்கமுள்ள அரசரின் மாட்சியில் பங்கேற்பதற்காக, அவரது அரசை உலகில் பரவச் செய்கிறவர்களாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

இறையாட்சிக்குரியவர்களே, இஸ்ரயேலின் அரசராக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்ட நிகழ்வை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. இஸ்ரயேலுக்கு தலைமை தாங்கும் ஆயராக தாவீதை ஆண்டவர் நியமித்ததை நாம் காண்கிறோம். தாவீதின் வழிமரபினராக இவ்வுலகில் தோன்றிய நம் ஆண்டவர் இயேசு, தந்தையின் மாட்சியில் வீற்றிருந்து அனைத்துலகையும் ஆண்டு நடத்தி வருகிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். உலகின் எல்லா நாட்டினரும் மொழியினரும் இயேசுவை அரசராக ஏற்றுக்கொள்ள உழைக்கும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

இறையாட்சிக்குரியவர்களே, கடவுள் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்து தம் மகன் இயேசுவின் ஆட்சிக்கு உட்படுத்தியுள்ளார் என்பதை திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் நினைவூட்டுகிறார். கடவுளின் சாயலாக விளங்கும் நம் ஆண்டவர் இயேசு வழியாய், அனைத்தும் அவருக்காகப் படைக்கப்பட்டன என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால், கடவுளோடு ஒப்புரவாக்கப் பெற்றிருக்கும் நாம், இறையரசின் தூதுவர்களாக வாழும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. திருச்சபையின் அரசரான இறைவா, உமது நிலையான அரசை உலகெங்கும் நிறுவும் ஆர்வத்துடன், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தி பணியாற்றிட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசர்களுக்கு அரசரான இறைவா, உமது அரசின் மதிப்பீடுகளுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் தலைவர்கள் மனந்திரும்பவும், உலகெங்கும் உமது அரசு வளர்ச்சி பெறவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னரான இறைவா, எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மையின் நற்செய்தியை விரும்பித் தேடவும், உம் திருமகனின் மேலான ஆட்சியை மனமுவந்து ஏற்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சியின் மன்னரான இறைவா, வாழ்வின் குறிக்கோளை அறியாமல் இவ்வுலகின் செயற்கைச் சூழலில் சிக்கி, தவறான இலக்கை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருப்போரை மனந்திருப்ப வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வெற்றி வேந்தரான இறைவா, மனித இயல்பில் துன்பங்களை ஏற்ற உம் திருமகனின் விண்ணக மாட்சியில் பங்குபெற எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.