திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு
டிசம்பர் 22, 2019
திருப்பலி முன்னுரை:

அன்பானவர்களே, திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். கன்னி கருவுற்று இறைமகனைப் பெற்றெடுப்பார் என்ற வாக்குறுதி விரைவில் நிறைவேறும் என்பதை இன்றையத் திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. மரியாவை ஏற்கத் தயங்கிய யோசேப்புக்கு இறைமகனின் பிறப்பு பற்றியத் தெளிவை வானதூதர் வழங்கியதைக் காண்கிறோம். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான இறுதிகட்டத் தயாரிப்பில் நுழைகின்ற நாம், கடவுளுக்கு நெருக்கமானவர்களாக வாழ்ந்து அர்ப்பண உணர்வுடன் அவரது திட்டத்தில் ஒத்துழைக்க வரம் வேண்டி, இந்த திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:

அன்பானவர்களே, யூதா அரசர் ஆகாசு கடவுளிடம் ஓர் அடையாளம் கேட்குமாறு இறைவாக்கினர் எசாயா வலியுறுத்திய நிகழ்வை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. “ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்ற ஆகாசின் மறுமொழியை அடுத்து, ‘இம்மானுவேல்’ குறித்த அடையாளத்தை கடவுளின் பெயரால் இறைவாக்கினர் வெளிப்படுத்துகிறார். கன்னி மரியாவின் மகனாக இவ்வுலகில் தோன்றி, நம்மோடு தங்கியிருக்கின்ற இயேசுவோடு ஒன்றித்து வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அன்பானவர்களே, கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக வாக்களித்திருந்த நற்செய்தி இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியதை, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல் எடுத்துரைக்கிறார். பிற இனத்தவராகிய நாமும் இயேசு கிறிஸ்து வழியாகவே கடவுளுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். கடவுள் வழங்குகின்ற அருளும் அமைதியும் நம்மோடு என்றும் நிலைத்திருக்க வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. அமைதியின் அரசரே இறைவா, எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம்மிடமிருந்து வருகின்ற அமைதியையும் மகிழ்ச்சியையும் உலகிற்குப் பகிர்ந்தளிக்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியின் வேந்தரே இறைவா, உலக நாடுகளின் தலைவர்கள் உம்மை சோதிக்கும் எண்ணத்தோடு செயல்படாமல், இயற்கையில் நீர் காட்டும் அடையாளங்ளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆட்சி செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னரே இறைவா, உம் திருமகனின் பிறப்பு விழாவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் மக்கள் அனைவரும், அர்த்தமுள்ள விதத்தில் தங்களது உள்ளத்தைத் தயார் செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நலன்களின் நாயகரே இறைவா, மொழி, இனம், சமயம் ஆகிய வேறுபாடுகளாலும், போர், வன்முறை போன்ற அமைதியற்றச் சூழலாலும் துன்புறும் மக்கள், உம்மில் புது வாழ்வு காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. பேரன்பின் பெருஞ்சுடரே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது அருளையும் அமைதியையும் உடனிருப்பையும் நிறைவாக சுவைத்து மகிழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.