திருவருகைக்காலம் 3ஆம் ஞாயிறு
டிசம்பர் 15, 2019
திருப்பலி முன்னுரை:

அன்புக்குரியவர்களே, திருவருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய நாளை நம் தாய் திருச்சபை மகிழ்ச்சி ஞாயிறாக சிறப்பிக்கிறது. இயேசுவே மெசியா என்பதை அறிந்து, அவரது வருகைக்காக மகிழ்ச்சியோடு தயாரிக்க இன்றையத் திருவழிபாடு வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். விண்ணரசின் மகிழ்ச்சியில் பங்கேற்க நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். திருமுழுக்கு யோவானைப் போன்று இறையாட்சியின் வருகைக்காக ஆர்வத்துடன் உழைக்க வரம் வேண்டி, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:

அன்புக்குரியவர்களே, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா வழங்கிய மகிழ்ச்சியின் நற்செய்தியை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும், பொட்டல் நிலம் அக்களித்து பூத்துக் குலுங்கும் என எசாயா முன்னறிவிக்கிறார். பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும், வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் என்ற ஆண்டவரின் வாக்குறுதியை எடுத்துரைக்கிறார். நமது துன்பமும் துயரமும் பறந்தோடவும், நமது வாழ்வு மகிழ்ச்சியும் பூரிப்பும் அடையவும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அன்புக்குரியவர்களே, ஆண்டவரின் வருகைக்காக நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார். நாம் தண்டனைத் தீர்ப்பு பெறாதவாறு, மற்றவர்களுக்கு எதிராக முறையீடு செய்யாமல் எச்சரிக்கையாக நடக்க அழைப்பு விடுக்கிறார். இறைவாக்கினர்களை முன்மாதிரியாகக் கொண்டு துன்பங்களைத் தங்குமாறு நமக்கு அறிவுரை வழங்குகிறார். ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்து, அவர் தருகின்ற மகிழ்ச்சியில் பங்கேற்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. மகிழ்ச்சியின் மன்னரே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு பணி செய்வதில் மகிழ்ந்திருக்கவும், உமது நற்செய்தியின் மகிழ்ச்சியை உலகோருக்கு பகிரவும் வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அக்களிப்பு தருபவரே இறைவா, வன்முறை, தீவிரவாதம், போர் போன்றவற்றால் அமைதியின்றி தவிக்கும் இவ்வுலக மக்களை, உமது அன்பால் ஒன்றிணைத்து, அக்களிப்பின் தைலத்தால் திருநிலைப்படுத்துமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மகிமையின் வேந்தரே இறைவா, எம் நாட்டு மக்களிடையே பிரிவுகளையும் பிணக்குகளையும் தூண்டி, அமைதியை சீர்குலைப்போரை மனந்திருப்பி, உமது மேன்மையை இந்தியர்கள் அனைவரும் உணரச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. மனமாற்றம் அளிப்பவரே இறைவா, தீமைக்குரிய இருளின் பாதையில் நடக்கும் அனைவரும், ஒளியாகிய உம்மை கண்டுகொள்ளவும், அதன் வழியாக உடல், உள்ள, ஆன்ம நலன்களை பெற்று மகிழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அகமகிழ்வின் ஊற்றே இறைவா, உம் திருமகனின் வருகைக்காக காத்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மீதும் உமது அருளை பொழிந்து, மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.