திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
டிசம்பர் 1, 2019
திருப்பலி முன்னுரை:

அன்பிற்கினியவர்களே, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம். புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாளாகிய இன்று, ஆண்டவ ரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். நாம் வாழும் இந்த பாவச் சூழ்நிலை ஆண்டவரின் வருகைக்கான எச்சரிக்கை என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. திருடனைப் போன்று, நினையாத நேரத்தில் மானிட மகனின் வருகை நிகழும் என்று இயேசு எச்சரிக்கிறார். கடவுளின் அரசில் பங்கேற்க எடுத்துக் கொள்ளப்படுவோரில் ஒருவராய் இருக்குமாறு விழிப்புடன் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

அன்பிற்கினியவர்களே, இறுதி நாள்களைப் பற்றி இறைவாக்கினர் எசாயா கண்ட காட்சியை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை அனைத்து மலைகளுக்கும் மேலாய் உயர்த்தப்படும், மக்கள் அனைவரும் ஆண்டவரின் கோவிலைத் தேடிச் செல்வார்கள் என்ற முன்னறிவிப்பு வழங்கப்படுகிறது. வேற்றினத்தார் தீமைகளை விட்டொழித்து ஆண்டவரின் நெறியில் நடப்பார்கள் என்ற உறுதியும் அளிக்கப்படுகிறது. நாமும் ஆண்டவர் காட்டும் வழியில் அவரது ஒளியில் நடக்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அன்பிற்கினியவர்களே, இறுதிக்காலம் நெருங்கி வந்து விட்டது என்பதை உணர திருத்தூர் பவுல் விடுக்கும் அழைப்பு இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம் பெறுகிறது. இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். இவ்வுலகின் தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் திருத்தூதர் நம்மை எச்சரிக்கிறார். இது உறக்கத்தில் இருந்து விழித்தெழும் நேரம் என்பதை உணர்ந்து வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. விழித்திருக்க அழைப்பவரே இறைவா, உமது திருமகனின் வருகைக்காக இந்த உலகை விழிப்புடன் தயாரிக்கும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வல்லமை தருபவரே இறைவா, போர்களாலும், வன்முறைகளாலும் நிறைந்திருக்கும் இந்த உலகை உமது அரசுக்குரிய இடமாக மாற்றும் வரத்தை, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒன்று சேர்ப்பவரே இறைவா, எம் நாட்டு மக்களிடையே நிலவும் சிலை வழிபாடுகள் ஒழியவும், உண்மை கடவுளாகிய உம்மில் நம்பிக்கை கொண்டு உமது கோவிலை அனைவரும் நாடி வரவும் அருள் புரிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் காட்டுபவரே இறைவா, உமது வழியில் நடக்காத கிறிஸ்தவர்கள் அனைவரும் இருளின் செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய இயல்பைப் பெற்றுக்கொள்ள உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அனைத்துலக அரசரே இறைவா, இயேசுவின் வருகைக்காக விழிப்புடன் காத்திருப்பவர்களாய் வாழும் வரத்தை, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வழங்கிப் பாதுகாத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.