மூவொரு கடவுள் பெருவிழா
திருப்பலி முன்னுரை:

கடவுளுக்குரியவர்களே, மூவொரு கடவுள் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மனித அறிவுக்கு எட்டாத மறைபொருளாகிய இறைவனின் இயல்புக்கு திருச்சபை இன்று விழா எடுக்கிறது. மனிதரை தமது சாயலாக படைத்த கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று இறையாட்களாக மீட்பின் வரலாற்றில் தம்மை வெளிப்படுத்துகிறார். வாக்கான இறைமகனை நித்தியத்திற்கும் பிறப்பிக்கும் இறைத்தந்தை, இறைத்தந்தையின் நித்திய வாக்கான இறைமகன், இருவரிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியார் என மூன்று இறையாட்களுக்கும் திருச்சபை விளக்கம் அளிக்கிறது. தந்தையுடையவை யாவும் மகனுடையவை; அவர்களது முழு உண்மையை நோக்கி தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார். மூவொரு கடவுளின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் அவரது சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

கடவுளுக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம், உலகை படைத்தவராம் இறை ஞானத்தின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. தொடக்கத்தில், பூவுலகு உருவாகும் முன்னே, ஆண்டவர் ஞானத்தை நிலைநிறுத்தினார். கடல்களும், பொங்கி வழியும் ஊற்றுகளும் தோன்றும் முன்பும், மலைகளும், குன்றுகளும், பரந்தவெளிகளும் உண்டாகும் முன்பும் ஞானம் பிறந்த செய்தி நமக்கு வழங்கப்படுகிறது. படைப்புகள் அனைத்தின் சிற்பியாய் இறைவனின் ஞானம் இருந்ததை உணர நாம் அழைக்கப்படுகிறோம். எல்லாம் வல்லவரான மூவொரு கடவுளின் மேன்மையை உணர்ந்து, அவரது நம்பிக்கைக்கு உரியவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுளுக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இயேசு கிறிஸ்துவின் வழியாகவே நாம் கடவுளோடு நல்லுறவு கொள்ளும் அருள் நிலையைப் பெற்றிருக்கிறோம் என எடுத்துரைக்கிறார். நாம் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால், கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்ற எதிர்நோக்குடன் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதில் மகிழ்ச்சிகொள்ள அழைக்கப்படுகிறோம். தூய ஆவியாரின் வழியாக நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ள கடவுளின் அன்பை, பிறரோடு பகிர்ந்து வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு: 
1. விண்ணகத் தந்தையே இறைவா, திருச்சபையின் மக்களை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது உடனிருப்பை உணர்ந்து வாழவும், உலக மக் களை உம்மிடம் ஈர்க்கவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. உண்மையின் ஊற்றே இறைவா, இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு கடவுளாகிய நீரே உண்மை இறைவன் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதியிலும் ஒற்றுமையிலும் வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அனைத்துலக அரசரே இறைவா, உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த விருப்பங்களில் நாட்களை செலவிடும் எம் நாட்டு மக்கள் அனைவரும், நிலை வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேட துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒற்றுமை அருள்பவரே இறைவா, மதம், இனம், மொழி, பண்பாடு போன்ற காரணங்களால் பிரிந்து வாழும் மாந்தர் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளைகள் என்ற உண்மையை உணர்ந்து ஒற்றுமையில் வளர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மூவொரு கடவுளே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் மீதான விசுவாசத்திலும் அன்பிலும் வளரவும், உமக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.