உயிர்ப்பு காலம் 6-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

அமைதிக்குரியவர்களே, இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இறைவனின் அமைதியைக் கொண்டவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் மீது அன்பு கொண்டு, அவர் சொல்வதைக் கடைப்பிடித்து வாழவும், அதன் வழியாக இறைத்தந்தையின் அன்பைப் பெறவும் நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் மீது கொள்ளும் அன்பின் ஆற்றலால் வழங்கப்படும் அமைதியை சுவைக்க இயேசு நம்மை அழைக்கிறார். தூய ஆவியாரின் வழிகாட்டுதலால், உலகம் தரும் அமைதிக்கு மேலாக கிறிஸ்து அருளும் அமைதியை வாழ்வில் உணரும் வரம் வேண்டி இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

அமைதிக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம், திருச்சபையின் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமு றைகள் பற்றிய திருத்தூதர்களின் போதனைகளை எடுத்துரைக்கிறது. யூதரல்லாத பிற இனத்து கிறிஸ்தவர்கள் மீட்படைய விருத்தசேதனம் தேவையா என்பது குறித்த சந்தேகம் எழுந்தபோது, அது தேவையில்லை என திருத்தூதர்கள் முடிவு செய்கிறார்கள். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, பரத்தைமை ஆகியவற்றை தவிர்க்குமாறு, தூய ஆவியாரின் தூண்டுதலால் திருத்தூதர்கள் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். தூய ஆவியாரின் செயலால் இயங்கும் திருச்சபைக்கு அமைதியுடன் கீழ்ப்படியும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அமைதிக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக எருசலேம் குறித்த யோவானின் காட்சியை நமக்கு எடுத்துரைக்கிறது. கடவுளின் மாட்சியால் நிறைந்து ஒளி வீசிய அந்த நகருக்கு பன்னிரண்டு வாயில்கள் இருந்ததாகவும், அவற்றில் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் வாசகம் விளக்குகிறது. திருச்சபையைக் குறிக்கும் அந்நகரின் பன்னிரு அடிக்கற்களில் திருத்தூதர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. நகரின் கோயிலாக ஆட்டுக்குட்டியாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே விளங்கியதாக காண்கிறோம். மாட்சிமிகு விண்ணகத் திருச்சபையின் மக்களாக அமைதியில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு: 
1. அமைதியின் ஊற்றே இறைவா, பலவித அச்சுறுத்தல்களால் துன்புறும் உமது திருச்சபையை கனிவுடன் கண்ணோக்கி, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரின் வழியாக அமைதியின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியின் அரசே இறைவா, உலகப் பொருட்கள் மீதுள்ள ஆசையாலும், அதிகாரத்தை நிலைநாட்ட துடிப்பதாலும், போர், வன்முறை ஆகியவற்றின் வழியாக அமைதியை சீர்குலைக்கும் தலைவர்கள் மனந்திரும்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அமைதியின் நிறைவே இறைவா, எங்கள் நாட்டு மக்களிடையே, சாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினையைத் தூண்டுவோர் மனந்திரும்பவும், இந்திய மக்கள் அனைவரும் உம்மில் நிறைவு காணவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அமைதி தருபவரே இறைவா, உலகெங்கும் வறட்சி, பசி, வறுமை, நோய், அடக்குமுறை போன்றவற்றால் மனக்கலக்கம் அடைந்து வருந்துகின்ற அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அமைதியின் தந்தையே இறைவா, எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரிடமும் அன்பும் ஒற்றுமையும் பெருகவும், நாங்கள் உமது நிறை அமைதியில் மகிழ்ச்சி காணவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.