உயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

உண்மைக்குரியவர்களே, உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் உயிர்ப்பை முழுமையாக ஏற்று, உண்மையான இறைமகனாகிய அவரைப் பின்தொடர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசு தம் சீடர்களுக்கு திபேரியக் கடல் அருகே தோன்றியபோது, சீடர்கள் அவரில் சந்தேகம் கொள்ளவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களைப் போன்று, ஆண்டவரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம். பேதுருவைப் போன்று இயேசுவின் மீதான அன்பை வெளிப்படுத்த மீண்டும் நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இயேசு அனுபவத்தைப் பெற்று, நாமும் உயிர்ப்பின் மக்களாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

உண்மைக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம், யூத தலைமைச் சங்கத்துக்கு முன்பாக திருத்தூதர்கள் இயேசுவின் உயிர்ப்புக்கு துணிவுடன் சான்று பகர்ந்ததை எடுத்துரைக்கிறது. யூதர்களின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்ட இயேசு, கடவுளின் வல்லமையால் உயிர்த்தெழுந்தார் என்பதை திருத்தூதர்கள் பறைசாற்றுவதைக் காண்கிறோம். மக்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கும் மீட்பரான இயேசு தந்தையாம் கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருப்பதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவுக்காக எத்தகைய அவமதிப்பையும் சகித்து வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

உண்மைக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், நமக்காக கொல்லப்பட்டு, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டியாக சித்தரிக்கிறது. “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதிபெற்றது” என்று விண்ணகத்தில் கேட்ட புகழொலியை யோவான் எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவின் மாட்சி இங்கு பறைசாற்றப்படுகிறது. விண்ணக அரியணையில் வீற்றிருக்கும் கடவுளில் கிறிஸ்துவின் மாட்சி துலங்குவதை உணர்ந்திட நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் மாட்சியை உணர்ந்தவர்களாய், அவரது புகழ்பாடும் வகையில் வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு: 
1. ஆற்றலின் ஊற்றாம் இறைவா, திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும், இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக உலகெங்கும் நற்செய்தியை பறைசாற்றத் தேவையான துணிவை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. மேன்மைமிகு அரசராம் இறைவா, பிற சமயத்தினரின் அவமதிப்புகளை பொருட்படுத்தாமல், மக்கள் அனைவரிடையேயும் உம் திருமகனது மேன்மையைக் கொண்டு சேர்க்கும் கருவிகளாக கிறிஸ்தவர்கள் அனைவரையும் உருமாற்றுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் உருவாம் இறைவா, எங்கள் நாட்டில் உருவெடுத்து வரும் மத, இன, மொழி அடிப்படையிலான தீவிரவாதங்கள் அடியோடு மறையவும், மக்கள் அனைவரின் இதயங்களும் உம் அன்பால் ஆட்கொள்ளப் பெறவும் துணைபுரியுமாறு  உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கத்தின் நிறைவாம் இறைவா, உம்மால் படைக்கப்பட்டு மனிதருக்கு வழங்கப்பட்ட இயற்கை வளங்கள் தேவைக்கேற்ப பகிரப்படவும், அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப் பெறவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. உண்மையின் நிறைவாம் இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்று, சொற்களாலும், செயல்களாலும் உமது உயிர்ப்பின் புகழ்பாடும் சாட்சிகளாக திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.