இறை இரக்கத்தின் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

அன்பர்களே, இறை இரக்கத்தின் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இந்த நாளில்தான் உயிர்த்த இயேசு திருத்தூதர் தோமாவுக்குத் தமது காயங்களைக் காட்டி, தம்மீது விசுவாசம் கொள்ள அழைப்பு விடுத்தார். கடவுளின் இருப்பை கேள்வி கேட்கும் அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், அவர் நம்மீது இரக்கம் கொண்டு அவரது உடனிருப்பை உணர்த்துகிறார் என்பதை புரிந்துகொள்ள இன்றைய நற்செய்தி நமக்கு உதவுகிறது. கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பவும், அவருக்கு சான்று பகரவும் அழைக்கப்பட்டுள்ள நாம் விசுவாசத்தில் வளர வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

அன்பர்களே, இன்றைய முதல் வாசகம், திருத்தூதர்கள் வழியாக நிகழ்ந்த அருஞ்செயல்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. திருத்தூதர்கள் செய்த அற்புதங்களால் ஏராளமான ஆண்களும் பெண்களும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, இயேசுவின் சீடர்களானதை நாம் காண்கிறோம். திருத்தூதர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையால், பேதுருவின் நிழல் பட்டவர்கள் கூட நலமடைந்த நிகழ்வு, நாம் கடவுள் மீதும் அவரது பணியாளர்கள் மீதும் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க அழைக்கிறது. நாமும் ஆண்டவரில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அன்பர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், மானிடமகனின் மாட்சியைப் பற்றிய யோவானின் சான்றை எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவின் ஆட்சியுரிமையில் பங்குபெறும் பொருட்டு அவரது வேதனைகளில் பங்கு பெற்றவராக யோவான் தன்னை சுட்டிக்காட்டுகிறார். நாமும் கிறிஸ்துவோடு இணைந்து வாழ அழைப்பு விடுக்கிறார். எப்பொழுதும் வாழ்பவரும், சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டவருமான ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். என்றென்றும் வாழும் கிறிஸ்து இயேசுவுக்கு சான்று பகரும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு: 
1. நம்பிக்கையின் நாயகரே இறைவா, உம் திருமகன் உயிர்ப்பு மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உலகில் உமது சாட்சிகளாக திகழ வரமருள உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் அரசரே இறைவா, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், உலகப் போக்கில் இருந்து விலகி நிறையுண்மையாக விளங்கும் உம்மை நாடித் தேடவும், உம் திருமகனின் உயிர்ப்பில் முழு நம்பிக்கை கொண்டவர்களாக, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர துணைபுரிய உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் நிறைவே இறைவா, உண்மையின் ஒளியை ஏற்காத எம் நாட்டு மக்கள் அனைவரும், உம் திருமகனின் உயிர்ப்பில் உள்ள உண்மையை அறிந்து, அதன் வழியாக நீர் மக்களுக்கு ஏற்பாடு செய்துள்ள மீட்பை பெற்றுக்கொள்ளவும் தேவையான அகத்தூண்டுதலை அளிக்க உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுவாழ்வின் ஊற்றே இறைவா, இலங்கையில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட எம் தமிழ் சொந்தங்கள் அனுபவிக்கும் வேதனைகளை பரிவுடன் கண்ணோக்கி, அவர்கள் துன்பங்கள் நீங்கவும், புதுவாழ்வு பெறவும், உமது மீட்பளிக்கும் அருளைக் கண்டுணரவும் உதவிபுரிய உம்மை மன்றாடுகிறோம்.
5. நன்மைகளின் உறைவிடமே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது அருஞ்செயல்களால் நிறைவு பெறவும், விசுவாசத்துடன் உமக்கு சான்று பகர்ந்து மகிழ்ச்சி நிறைந்த விண்ணக வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் அருள்பொழிய உம்மை மன்றாடுகிறோம்.