பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

அன்பர்களே, பொதுக்காலத்தின் முப்பத்தோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் நாம் நெருங்கிச் செல்லும்போது, நாம் அவருக்கு உகந்தவர்களாக மாற்றம் பெறுகிறோம் என்பதை இன்றையத் திருவழிபாடு நமக்கு கற்பிக்கிறது. நாம் பாவிகளாய் இருந்தாலும் கடவுளைத் தேடிச் செல்லும் துணிவு பெறும்போது, அவரது இரக்கத்தை நாம் பெற்றுக் கொள்வது உறுதி. வரிதண்டிய சக்கேயு ஆண்டவரைக் காண முயற்சி எடுத்த வேளையில், அவரது வீட்டில் தங்க விரும்பி இயேசு சென்றதைக் காண்கிறோம். ஆண்டவரை தமது வீட்டில் வரவேற்ற சக்கேயுவின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. நாமும் ஆண்டவரை முழு மனதோடு நமது வீட்டில் ஏற்று, பாவ வாழ்வில் இருந்து விடுதலை பெற வரம் வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

அன்பர்களே, நம் கடவுள் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றார் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. நாம் பாவங்களை விட்டு விலகி, மனந்திரும்ப வேண்டுமென்று ஆண்டவர் நமக்காக காத்திருக்கிறார் என்பதை உணர அழைப்பு விடுக்கிறது. தவறு செய்பவர்களைத் திருத்தவும், பாவம் செய்கிறவர்களை அவற்றிலிருந்து விடுவிக்கவும் கடவுள் இரக்கத்துடன் செயல்படுகிறார் என்பதை இவ்வாசகம் நினைவூட்டுகிறது. கடவுளிடம் நம்பிக்கை கொண்டு தீமையிலிருந்து விடுபட வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு நாம் கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அன்பர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுளின் அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக அவரே நம்மை மாற்ற வேண்டுமென திருத்தூதர் பவுல் தமது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். நமது நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையால் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கடவுள் தமது வல்லமையால் நிறைவுறச் செய்யவும் அவர் வாழ்த்துகிறார். ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் நாம், மனம் கலங்கத் தேவையில்லை என்று அறிவுறுத்துகிறார். நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து, அவரது அரசில் பங்குபெற வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. மீட்பின் ஊற்றே இறைவா, திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், பாவிகளையும் உமது பாதத்தில் சேர்க்க உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வின் ஊற்றே இறைவா, உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது தீய ஆசைகளை விடுத்து, உமது இரக்கத்திற்குத் தங்களை ஒப்படைத்து, புதுவாழ்வு வாழ உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆற்றலின் ஊற்றே இறைவா, எம் நாட்டு மக்கள் அனைவரும் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை பெற்று, இரக்கமுள்ள உமது திருவடியில் சரணடைய உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கத்தின் ஊற்றே இறைவா, பாவிகள் அனைவரும் மனந்திரும்பவும், மனித சமூகத்தில் நிலவும் சீர்கேடுகள் ஒழியவும், போர்களும் வன்முறைகளும் மறையவும் உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
5. அருளின் ஊற்றே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உமது அருளை நாடி வந்து மீட்படைய உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.