பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

நன்றியுள்ளவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் உதவியை நம்பிக்கையோடு கேட்கவும், பெற்ற நன்மைகளுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்தவும் இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. அற்புதங்களுக்காகவும், அதிசயங்களுக்காகவும் மட்டும் கட வுளைத் தேடுவது சரியல்ல என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அல்ல, இறைவனின் விருப்பத்தை முதன்மையாக நிறைவேற்ற இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். குணமடைந்த பத்து தொழுநோயாளர்களில் சமாரியரான ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். “மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்ற இயேசுவின் கேள்வி அவர் நன்றியை எதிர்ப்பார்ப்பவர் என்பதை நமக்குத் தெளிவாக்குகிறது. இறைவன் நமக்கு செய்த நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:

நன்றியுள்ளவர்களே, இன்றைய முதல் வாசகம், நாமானின் தொழுநோய் குணமானதைப் பற்றி எடுத்துரைக்கிறது. இறைவாக்கினர் சொல்லைக் கேட்டு யோர்தானில் ஏழுமுறை மூழ்கி எழுந்ததால் நாமான் நலமடைந்ததைக் காண்கிறோம். தொழுநோயால் பொலிவிழந்து காணப்பட்ட அவரது உடல், குழந்தையின் உடலைப் போன்று மாறியதாக வாசகம் எடுத்துரைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாமானின் நன்றியுணர்வு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அவர் எலிசாவுக்கு நன்றி கூறியதுடன், ஆண்டவருக்கு உண்மை உள்ளவராய் நடப்பதாக வாக்களிக்கிறார். நாமும் நன்றி மறக்காமல் ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

நன்றியுள்ளவர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இயேசுவோடு நிலைத்திருப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி குறித்து எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவின் நற்செய்திக்காகவும், ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மீட்புக்காகவும் புனித பவுல் ஏற்றுக்கொண்ட துன்பம் இங்கே விளக்கப்படுகின்றது. கிறிஸ்துவோடு இறந்து அவரோடு வாழ்வதற்கும், கிறிஸ்துவோடு நிலைத்திருந்து அவரோடு மாட்சியுடன் ஆட்சி செலுத்தவும் நாம் அழைக்கப்படுகிறோம் என்று நினைவூட்டுகிறார். கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுள்ள நாம், அவருக்காகத் துன்பங்களையும் மகிழ்வோடு ஏற்க வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. நன்மைகளின் நாயகரே இறைவா, திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நீர் வழங்கியுள்ள பொறுப்புகளை தளரா மனதுடனும் நன்றியுணர்வுடனும் நிறைவேற்ற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் உறைவிடமே இறைவா, உலக நாடுகளின் தலைவர்களை உமது அன்பை விதைக்கும் கருவிகளாக உருவாக்கி, உமது படைப்புகளை நன்றியுணர்வுடன் பாதுகாக்கும் திறனை அவர்களுக்கு அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் இருப்பிடமே இறைவா, எம் நாட்டை ஆட்சி செய்து வழிநடத்தும் தலைவர்கள் அனைவரும் தன்னலம் துறந்து, மக்களிடையே நீதியை நிலைநாட்டும் வேட்கையுடனும் உமக்கு நன்றியுணர்வுடனும் பணியாற்ற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நலன்களின் ஊற்றே இறைவா, இவ்வுலகில் பல்வேறு நோய்களால் வருந்துவோர் நம்பிக்கையுடன் உம்மைத் தேடி வரவும், உமது குணமளிக்கும் வல்லமையால் நலம் பெற்று உமக்கு நன்றி செலுத்தவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கத்தின் நிறைவே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக வாழவும், உமது அருளால் பெற்ற நன்மைகளுக்கு நன்றி உள்ளவர்களாகத் திகழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.