பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

மேன்மைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நம்மிடம் அதிகமாக இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. பிறர்நலம் நாடுவதால் கிடைக்கும் பேரின்பத்தையும், தன்னலத்தால் வரும் வேதனையையும் குறித்து இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் எடுத்துரைக்கிறார். வீட்டு வாயில் அருகே இருந்த ஏழை இலாசரை கண்டுகொள்ளாத செல்வர் பாதாளத்துக்குச் செல்கிறார். தனக்கு கிடைத்த உணவுத் துண்டுகளைக் கொண்டு தெரு நாய்களின் பசியாற்றிய இலாசர் ஆபிரகாமின் மடியில் அமர்ந்திருக்கிறார். நம்மிடம் இருக்கின்ற செல்வத்தை நமது மகிழ்ச்சிக்காக மட்டுமின்றி, பிறரை மகிழ்விக்கவும் பயன்படுத்த வரம் கேட்டு இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:

மேன்மைக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக பேசும் இறைவன், மகிழ்ச்சியிலும் செல்வத்திலும் திளைத்திருப்போருக்கு விளையப்போகும் கேடு பற்றி எடுத்துரைக்கிறார். பஞ்சணை மீது சாய்ந்திருந்து பிறரை ஆட்டிப் படைப்போருக்கும், பெரிய விருந்துகளில் மகிழ்ச்சி தேடுவோருக்கும் கேடு விளையும் என கூறுகிறார். மதுவிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் இன்புற்றிப்போரின் மகிழ்ச்சியை நீக்கப்போவதாக ஆண்டவர் அறிவிக்கின்றார். தன்னலத்தால் விளையும் கேடுகளில் இருந்து நாம் தப்பி வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

மேன்மைக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், விசுவாச வாழ்வு வாழ விரும்பும் ஒவ்வொருவரும் பொருளாசையிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார். குறைச்சொல்லுக்கு இடந்தராத வகையில், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பின் பற்றி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். வாழ்வளிக்கும் கடவுள் முன்னிலையில் மாசற்ற வர்களாய் வாழ பவுல் நம்மை அழைக்கிறார். நம் விசுவாசத்தை வாழ்வாக்கி நிலை வாழ்வை பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. இரக்கம் நிறைந்த இறைவா, உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இரக்க சிந்தனை உள்ளவர்களாய் வாழ்ந்து, இறைமக்களின் தேவைகளை நிறைவு செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பு நிறைந்த இறைவா, உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள், அனைத்து மக்கள் மீதும் அன்பு கொண்டவர்களாக வாழ்ந்து, மிகுதியாக உள்ளவர்களிடம் பெற்று தேவையில் இருப்போருக்குப் பகிர்ந்தளிக்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. கனிவு நிறைந்த இறைவா, எம் நாட்டின் தலைவர்கள் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீது கனிவு கொண்டு, ஏற்றத்தாழ்வுகளையும், மனித நேயத்துக்கு எதிரான செயல்களையும் சமூகத்தில் இருந்து களைய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. பொறுமை நிறைந்த இறைவா, பசியையும் பிணியையும் பொறுமையுடன் சகித்தவர்களாய் துன்பத்தில் வாழும் மனிதர்கள் மீது கருணை காட்டி, அவர்களுக்குத் தேவையான உணவையும் உடல்நலத்தையும் வழங்கி உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மாட்சி நிறைந்த இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தன்னலம் நாடாமல் பிறர்நலம் பேணும் பகிர்வு மனப்பான்மையுடன் செயல்பட்டு, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.