பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

ஆண்டவருக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அன்பையும் பரிவையும் உணர்ந்தவர்களாய் பாவத்திலிருந்து மனமாற்றம் அடைய இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் மனம் திரும்பும்போது, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடித்த ஆயராக ஆண்டவர் மகிழ்ச்சி அடைகின்றார். தொலைத்த பணத்தைக் கண்டுபிடித்தவரைப் போன்று, விண்ணுலகத் தூதரிடையே மகிழ்ச்சி ஏற்படும் என ஆண்டவர் எடுத்துரைக்கிறார். விண்ணகத் தந்தையின் அன்பை உணராத பிள்ளைகளாய் அவரை விட்டு விலகிச் சென்ற பல தருணங்களுக்காக நாம் மன்னிப்பு வேண்டுவோம். மனமாற்றத்துடன் ஆண்டவரிடம் திரும்பிவர அருள் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

ஆண்டவருக்குரியவர்களே, மோசேயின் வேண்டுதலை ஏற்று, இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் இரக்கம் காட்டிய நிகழ்வை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. ஆண்டவரோடு உரையாடச் சென்ற மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதமானதால், இஸ்ரயேலர் பொற்கன்று வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனால் சினமுற்ற ஆண்டவர் அவர்களை அழித்தொழிக்க நினைத்தார். கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதியை நினைவூட்டி, இஸ்ரயேல் மக்களுக்காக மோசே பரிந்து பேசியதையும், அதன் மூலம் இஸ்ரயேல் மக்கள் காப்பாற்றப்பட்டதையும் காண்கிறோம். நாமும் புனிதர்களின் பரிந்துரையால் ஆண்டவரின் இரக்கத்தைப் பெற வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஆண்டவருக்குரியவர்களே, இறைமகன் இயேசுவின் பரிவன்புள்ள இரக்கத்தைக் குறித்து, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். ஆண்டவரை அறிந்து கொள்ளும் முன் அவரைப் பழித்துரைத்து, இழிவுபடுத்திய தம்மை, திருத்தூதராக நியமித்த இரக்கத்தைப் பற்றி பவுல் வியப்படைகிறார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கை மற்றும் அன்பால், அருள் அளவின்றிப் பெருகுவதாக அவர் நமக்கு சுட்டிக் காட்டுகிறார். எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற கடவுளுக்கு, நமது மனமாற்றத்தால் மாட்சி அளிப்பவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. எமது ஆயரே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் அழைப்பின் மேன்மையை உணர்ந்து, இறைமக்களை மனமாற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.
2. எமது நம்பிக்கையே இறைவா, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் வன்முறையின் பாதையிலிருந்து விலகி, மக்களிடையே அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பெருக உழைக்கும் நல்ல மனமாற்றத்தை வழங்கிட உம்மை மன்றாடுகிறோம்.
3. எமது நிறைவே இறைவா, திருத்தூதர் பவுலிடம் ஏற்பட்ட மனமாற்றம் எங்கள் நாட்டு சமயத் தலைவர்களிடம் நிகழவும், அதன் வழியாக எம் நாட்டு மக்கள் அனைவரும் உமது மீட்பைக் கண்டடையவும் துணைபுரிய உம்மை மன்றாடுகிறோம்.
4. எமது வாழ்வே இறைவா, பாவ நாட்டங்களின் பிடியில் சிக்கி எதிர்காலத்தை இழந்து நிற்கும் இளையோரை மனந்திருப்பி, தூய வாழ்வு வாழ்வதற்கான விடுதலையையும் மன உறுதியையும் பெற அருள்கூர்ந்திட உம்மை மன்றாடுகிறோம்.
5. எமது மாட்சியே இறைவா, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நல்ல ஆயராம் இயேசுவைப் பின்தொடரும் நல்ல மந்தைகளாக வாழவும், உமது மாட்சியில் பங்கு கொள்ளவும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்.