பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

இறையாட்சிக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுமாறு இன்றைய திருவழிபாடு வழியாக ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஆலயத்திற்கு வருவதாலும், நற்கருணை உட்கொள்வதாலும் மட்டுமே நாம் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாற முடியாது என்று எச்சரிக்கிறார். உலகப் போக்கிலான அகன்ற வழியில் செல்லும்போது, நாம் கடவுளிடம் இருந்து விலகிச் செல்கிறோம். ஆகவே, கடவுளுக்கு விருப்பமான விதத்தில் வாழும் இடுக்கமான வாயிலை நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று இயேசு வலியுறுத்துகிறார். இறையாட்சியின் பந்தியில் அமரும் தகுதி பெறுபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

இறையாட்சிக்குரியவர்களே, அனைத்து இனத்தவருக்கும் மொழியினருக்கும் கடவுள் வழங்கும் மீட்பைப் பற்றி இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. கடவுளின் புகழைக் கேள்விப்படாத, அவரது மாட்சியைக் கண்டிராத மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படும் என்று ஆண்டவர் கூறுகிறார். ஆண்டவரின் திருமலைக்கு மக்கள் அனைவரும் அழைத்து வரப்படுவார்கள் என்று முன்னறிவிக்கப்படுகிறது. இறையாட்சியில் நமது நண்பர்களையும் உறவினர்களையும் கூட்டிச் சேர்க்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

இறையாட்சிக்குரியவர்களே, நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் துன்பங்களை தாங்கிக்கொள்ள இன்றைய இரண்டாம் வாசகம் அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் நம்மைக் கண்டித்துத் திருத்துவதை நாம் அனுமதிக்க வேண்டும் என்றும், அதனால் மனம் தளர்ந்து போகக்கூடாது என்றும் நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. நம்மைத் திருத்துவதற்காக கடவுள் தருகின்ற துன்பங்கள், நாம் இறையாட்சியில் பங்கு பெறுவதை உறுதி செய்யும் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். எவ்வித தளர்ச்சியும் இன்றி நேரிய பாதையில் நடக்க வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. இறையாட்சி நாயகரே இறைவா, எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இறைமக்களை இடுக்கமான வாயிலில் நுழையப் பயிற்றுவிக்கும் நல்ல ஆசான்களாகத் திகழ வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. விருந்துக்கு அழைப்பவரே இறைவா, உலகெங்கும் வாழும் அனைத்து இனங்களையும் மொழிகளையும் சார்ந்த மக்கள், உம் திருமகனின் ஏற்று இறையாட்சியின் பந்தியில் பங்கேற்கத் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அமைதியின் அரசரே இறைவா, எம் நாட்டில் நிலவும் குழப்பமான சூழ்நிலைகள் மறையவும், மக்கள் அனைவரும் உமது மீட்பைக் கண்டடைவதற்கான நல்லதொரு காலம் கனியவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வழிகாட்டும் தெய்வமே இறைவா, போர்கள், வன்முறைகள், நோய்கள், அகதிநிலை போன்றவற்றால் துன்புறும் மக்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிந்து, அவர்களது துன்பங்கள் நீங்கிடச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மீட்பு அளிப்பவரே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், துன்பங்கள் வழியாகத் தூய்மை பெற்று, நேரிய வாழ்வால் இறையாட்சியின் விருந்துக்கு தகுதிபெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.