பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

செபிப்பவர்களே, பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவேண்டலின் வல்லமையை உணர்ந்து வாழ இன்றையத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசு, தந்தையாம் இறைவனிடம் தனிமையாக வேண்டிக் கொண்டிருந்ததைக் கண்ட சீடர்கள், இன்று தங்களுக்கும் இறைவேண்டல் செய்யக் கற்றுத்தருமாறு, அவரிடம் கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுக்கும் இயேசு, அதன் பயனையும் சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து இறைவேண்டல் செய்யும் நேர்மையாளரின் உணர்வுக்கு ஆண்டவர் மதிப்பளிப்பார் என்ற பாடத்தை மனதில் இருத்த நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் திருவுளத்தை நம்மில் அனுமதிக்கும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

செபிப்பவர்களே, இன்றைய முதல் வாசகம், சோதோம் கொமோரா நகரங்களை அழிவில் இருந்து காப்பாற்ற ஆபிரகாம் இறைவேண்டல் செய்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. கொடிய பாவங்களுக்காக அழிக்கப்பட இருந்த அந்த நகரங்களை, நீதிமான்களை முன்னிறுத்தி அவர் காப்பாற்ற முயல்வதைக் காண்கிறோம். ஐம்பது, நாற்பது, முப்பது என நீதிமான்களின் எண்ணிக்கையை குறைத்து ஆபிரகாம் பேரம் பேசுவதைக் காண்கிறோம். பத்து பேர் இருந்தால் கூட அந்நகரங்களை அழிக்க மாட்டேன் என்று கடவுள் வாக்களிக்கிறார். நமது செபங்களுக்கு கனிவோடு பதிலளிக்கின்ற ஆண்டவருக்கு உண்மை உள்ளவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

செபிப்பவர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நமக்கு வழங்கப்பட்ட பாவ மன்னிப்பைப் பற்றி எடுத்துரைக்கிறார். திருமுழுக்கின் வழியாக நாம் கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான நம்பிக்கையால் பாவத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளதை பவுல் நினைவூட்டுகிறார். நமது பாவங்களின் கடன்பத்திரம் ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தால் அழிக்கப்பட்டு விட்டதை உணர அழைக்கப்படுகிறோம். நம் பாவங்களை மன்னித்த கிறிஸ்துவின் அருளிலும் செப வாழ்விலும் வளர வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. செபங்களைக் கேட்பவரே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், திருச்சபையின் புதுவாழ்வுக்காக உழைக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாற்றங்களை தருபவரே இறைவா, உலக நாடுகளில் நிலவுகின்ற போர்களும், கலவரங்களும், ஒழுக்கக்கேடுகளும் முடிவைக் காண வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவரே இறைவா, பிரிவினை போக்குகளும், வன்முறைகளும், முறைதவறிய ஆசைகளும் எமது நாட்டிலிருந்து மறைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கருணை காட்டுபவரே இறைவா, வாழ்வின் பல்வேறு சோதனைகளால் துயருற்று தவிக்கும் மக்கள், நீர் வழங்குகின்ற அமைதியை சுவைக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நன்மை அளிப்பவரே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது திருவுளத்தை எம்மில் அனுமதித்து, பாவக்கட்டுகளில் இருந்து விடுதலை பெற வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.