பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

ஆண்டவருக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். கடவுளை நம் இல்லத்தில் வரவேற்கவும், அவரது வார்த்தையைப் பணிவுடன் கேட்கவும் தயார்நிலையில் இருக்குமாறு இன்றைய திருவழிபாடு அழைப்பு விடுக்கிறது. இறைவார்த்தை வழியாக நம்மோடு பேசும் ஆண்டவரின் குரலுக்கு முழுமையாக செவிகொடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க நாம் அழைக்கப்படுகிறோம். நோயிலும், பசியிலும் வாடுவோரில் தம்மைக் கண்டு பணிவிடை புரிய அழைக்கும் ஆண்டவர், நற்கருணையில் தம்மையே நமக்கு உணவாக வழங்குகிறார். நற்கருணை வடிவில் நம்மைத் தேடிவரும் ஆண்டவரைத் தகுந்த தயாரிப்போடு வரவேற்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

ஆண்டவருக்குரியவர்களே, வழிப்போக்கர் வடிவில் தோன்றிய கடவுளுக்கு ஆபிரகாம் உணவு வழங்கி உபசரித்த நிகழ்வை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. திரித்துவ இறைவனின் அடையாளமாக மூன்று ஆட்கள் இங்கு தோன்றுவதைக் காண்கிறோம். அவர்களுக்கு அப்பங்கள் சுட்டும், இளங்கன்று கறி சமைத்தும் ஆபிரகாம் விருந்து படைக்கிறார். ஆபிரகாம் அளித்த விருந்தை உவப்போடு ஏற்ற ஆண்டவர், சாராவுக்கு ஈசாக்கின் பிறப்பு குறித்து வாக்களிக்கிறார். நாம் முழு மனதோடு கடவுளுக்குப் பணிசெய்து, அவரது கொடைகளை தாராளமாய் பெற்று மகிழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஆண்டவருக்குரியவர்களே, காலங்காலமாக மறைந்திருந்து கிறிஸ்து இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட இறைத்திட்டத்தைப் பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். மனிதராக பிறந்த வார்த்தையான கடவுள், நமக்காக அனுபவித்த வேதனையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறார். திருச்சபையின் வழியாக கடவுளின் திட்டம் மாட்சியுடன் செயல்படுவதாக பவுல் கூறுகிறார். கிறிஸ்துவில் முதிர்ச்சி பெற்று, நிலைவாழ்வின் மாட்சியைப் பெற நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவைப் பற்றிய ஞானத்தில் வளர வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. வாக்குறுதி தருபவரே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது வாக்குறுதிக்கு தகுதி உள்ளவர்களாக வாழவும், மக்களை உம்மிடம் கொண்டு சேர்க்கவும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. திட்டமிட்டு செயல்படுத்துபவரே இறைவா, மக்கள் அனைவரும் உம்மைப் பற்றிய உண்மையைத் தேடவும், உம் திருமகனில் நீர் நிறைவேற்றிய மீட்புத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. நல்வழி காட்டுபவரே இறைவா, உமது இறைவார்த்தையை அறிவிக்கத் தடை ஏற்படுத்தும் குழுக்கள் உலகிலிருந்து மறையவும், நற்செய்தி பணிக்கு இடறலான மனிதர்கள் மனந்திரும்பவும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. அமைதி அளிப்பவரே இறைவா, போர்கள், கலவரங்கள் மற்றும் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டு, அகதிகளாக வாழும் மக்கள் அனைவரும் உமது உதவியை வேண்டி, ஆறுதலடைய வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. உணவளித்து காப்பவரே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உம் திருமகனின் வார்த்தைகளைப் பின்பற்றி, உமது திருவுளத்தை எங்கள் வாழ்வாக்கிட வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.