பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

அனுப்பப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் அழைப்பை ஏற்று இறையட்சியைப் பறைசாற்ற இன்றையத் திருவழிபாடு நம்மை அழைக்கிறது. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போன்று வாழ அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர இயேசு அழைப்பு விடுக்கிறார். ஆண்டவருக்காக பணியாற்றும் அமைதியின் தூதர்களாக இந்த உலகில் செயல்பட இறைவன் நம்மை அழைக்கிறார். நம் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

அனுப்பப்பட்டவர்களே, ஆண்டவர் தரும் நிறைவாழ்வின் மகிழ்ச்சியைப் பற்றி இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. எருசலேமுக்கு கிடைக்கும் ஆறுதலையும் அக்களிப்பையும் பற்றிய ஆண்ட வரின் இறைவாக்கை இங்கு காண்கிறோம். “ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்” என்ற ஆண்டவரின் உறுதிமொழி, இறைவாக்கினர் எசாயா வழியாக வழங்கப்படுகிறது. “தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்: மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்: மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்” என்கிற வாக்குறுதியை சுவைக்க நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் மக்களாகவும், இறையாட்சியின் சாட்சிகளாகவும் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

அனுப்பப்பட்டவர்களே, கிறிஸ்துவில் நாம் புதிய படைப்புகளாவதைப் பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் பேசுகிறார். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்களாய் வாழ்வதன் அவசியத்தை அவர் நமக்கு உணர்த்துகிறார். வெளி அடையாளங்களையன்றி, உள்ளத்தின் அர்ப்பணிப்பையே ஆண்டவர் விரும்புகிறார் என்பதை எடுத்துரைக்கிறார். சிலுவையில் அறையுண்ட இயேசுவுக்காக அடிமை வாழ்வை ஏற்றுக்கொண்ட பவுல், தம் காயத் தழும்புகளைக் குறித்து எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவுக்காக துன்புறுவதைப் பற்றி பெருமை பாராட்டுகிறார். தாழ்மையுடன் நம்மை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, அவரது மக்களாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:

1. பணியாற்ற அனுப்புகின்ற இறைவா, நீர் தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது அறுவடையை மிகுதியாக்கும் உண்மையுள்ள பணியாளர்களாக செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நிறைவாழ்வு அருள்கின்ற இறைவா, உலகெங்கும் ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும், உமது இறையாட்சியின் கருவிகளாகப் பயன்படுத்துமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆறுதல் தருகின்ற இறைவா, எம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நற்செய்தி பணியாற்றும் மறைபணியாளர்கள் வழியாக, மற்ற சமய மக்கள் அனைவரும் உமது அன்பையும் ஆறுதலையும் சுவைக்க அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. தேற்றரவு அளிக்கின்ற இறைவா, பல்வேறு சூழ்நிலைகளால் அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும் உம்மை நாடி வரவும், தாயைப் போன்று தேற்றரவு அளிக்கும் உமது அன்பில் தாலாட்டப்படவும் வரம் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிழ்ச்சி வழங்குகின்ற இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமக்கு உகந்த நற்செய்தி பணியாளர்களாக வாழ்ந்து, இறையாட்சியின் மகிழ்ச்சியைப் பறைசாற்றத் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.