திருவுடல் திருரத்தப் பெருவிழா
திருப்பலி முன்னுரை:

ஆண்டவருக்குரியவர்களே, கிறிஸ்துவின் திருவுடல் திருரத்தப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். ஈசாக்கின் பலியும், பாஸ்கா செம்மறியும் நம் ஆண்டவர் இயேசுவின் சிலுவை பலியை முன்குறிப்பவையாக இருந்தன. கிறிஸ்துவின் சிலுவை பலியை எக்காலத்துக்கும் நிலைநிறுத்தும் அடையாளமாக, அவர் நமக்கு நற்கருணையை ஏற்படுத்தி தந்துள்ளார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பகிர்ந்து கொடுத்து ஆயிரக்கணக்கானோரின் பசியாற்றிய இயேசு, நற்கருணை வழியாக தம்மையே நமக்கு உண வாக தருகிறார். கோதுமை அப்பத்திலும், திராட்சை இரசத்திலும் மறைந்திருக்கும் கிறிஸ் துவின் உடனிருப்பை முழுமையாக நம்பி, அவரைப் போன்று மற்றவர்களின் நலனுக்காக நம்மையே பகிர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

ஆண்டவருக்குரியவர்களே, உன்னத கடவுளின் அர்ச்சகரான சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு, ஆபிரகாமுக்கு அப்பமும் திராட்சை ரசமும் கொண்டு வந்த நிகழ்வை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. மெல்கிசேதேக்கு ஆபிரகாமின் வெற்றிக்காக கடவுளைப் போற்றுவதையும், ஆபிரகாம் தமது உடைமைகளில் இருந்து பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக கொடுப்பதையும் காண்கிறோம். நித்திய தலைமைக் குருவாகிய இயேசு தருகின்ற வாழ்வளிக்கும் உணவையும் பானத்தையும் பெற தகுதி உள்ளவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஆண்டவருக்குரியவர்களே, நற்கருணை ஒரு விருந்தாக மட்டுமின்றி கிறிஸ்துவின் பலியாகவும் இருக்கிறது இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் என்பதை விளக்குகிறார். கிறிஸ்துவின் கல்வாரி பலிக்கு அடையாளமாக நற்கருணை உள்ளதை புரிந்துகொள்ள நாம் அழைக்கப் படுகிறோம். இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவ ருடைய சாவை அவர் வரும்வரை நாம் அறிவிக்கிறோம் என பவுல் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குபெறும் நாம், அவரது மறையுடலின் உறுப்பு களாக ஒன்றித்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு: 
1. எங்கும் நிறைந்தவராம் இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், நற்கருணையில் கிறிஸ்துவின் மறைபொருளான இருப்பை உணர்ந்து வாழவும், இறைமக்களை நற்கருணை விசுவாசத்தில் வளர்க்கவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒற்றுமை அருள்பவராம் இறைவா, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் தூண்டுதல் பெற உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. தியாகத்தின் உருவாம் இறைவா, எம் நாட்டு தலைவர்கள் தியாக உணர்வோடு செயல்பட்டு, உண்மை மற்றும் நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தவும், சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதல் அளிப்பவராம் இறைவா, உலகில் பல்வேறு அச்சுறுத்தல்களாலும், துன்புறுத்தல்களாலும் வாழ்வின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி நிற்கும் மக்களுக்கு, தேவையான ஆறுதலும் உதவியும் கிடைக்குமாறு அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பின் பிறப்பிடமாம் இறைவா, எங்கள் பங்கு சமூகத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நற்கருணை விசுவாசத்திலும், அன்பு வாழ்விலும், தியாக உணர்விலும் வளர உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.