“இயேசு கிறிஸ்து விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்” (Jesus Christ ascended into heaven, and is seated at the right hand of God the Father almighty) என திருத்தூதர்களின் ஏற்கையின் 6ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “இயேசு கிறிஸ்து விண்ணகத்துக்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.
உயிர்ப்பின் மாட்சி
கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மீண்டும் அவர் இவ்வுலக வாழ்வுக்கு வருவதன்று. சிலுவையில் அறையப்பட்டதும் அவருடைய பாடுகளின் அடையாளங்களைக் கொண்டதுமான உடலே அவரது உயிர்த்த உடலாகும். இருப்பினும் அது மாட்சிக்குரிய உடலின் பண்புகளோடு இறைவாழ்வில் பங்கெடுக்கிறது. இதன் பொருட்டே, உயிர்த்த இயேசு பல்வேறு முறைகளில் தாம் விரும்பிய வகைகளிலும் இடங்களிலும் தம் சீடர்களுக்குத் தம்மையே காண்பிக்கக் கூடியவராக இருந்தார். கிறிஸ்துவின் உயிர்ப்பில் கடவுளின் மூன்று ஆட்களும் அவரவருக்குரிய தனித்தன்மையோடு ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்: தந்தை தமது வல்லமையை வெளிப்படுத்துகிறார்; மகன் தாமே சுதந்திரமாகக் கையளித்த தமது உயிரை “மீண்டும் பெறுகிறார்” (யோவான் 10:17); தூய ஆவியார் இயேசுவின் உடலையும் ஆன்மாவையும் மீண்டும் இணைத்துப் புத்துயிரூட்டி மாட்சிப்படுத்துகிறார்.
விண்ணில் ஆட்சி
உயிர்த்தெழுந்தவருக்கு உரிய மாட்சி மூடிமறைக்கப்பட்டு, சாதாரண மனிதத் தோற்றத்தோடு நாற்பது நாள்களாகத் தம்மைத் திருத்தூதர்களுக்கு காண்பித்த இயேசு, அவர்களை நற்செய்தியின் தூதுவர்களாக ஏற்படுத்தினார். “உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றும்” (மாற்கு 16:15) பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தப் பிறகு, கிறிஸ்து விண்ணேற்றம் அடைந்து தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். தமது மனிதத்தன்மையோடு இறைமகனுக்கு உரிய நிலையான மாட்சியில் ஆட்சிபுரியும் ஆண்டவராக இயேசு கிறிஸ்து இப்போது உள்ளார். இறைத்தந்தையிடம் நமக்காகத் தொடர்ந்து பரிந்து பேசுகிறார்; தம் ஆவியாரை நமக்கு அனுப்புகிறார்; மேலும் நமக்காக அவர் ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு நாம் ஒருநாள் சென்றடைவோம் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றார்.