மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து, தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதரானார். திரித்துவத்தின் மூன்றாம் ஆளான தூய ஆவியாருடன் தமக்குள்ள தொடர்பு குறித்து இறைமகன் இயேசு என்ன கூறினார் என்பதை இங்கு காண்போம்.
ஆவியாரின் துணை
“நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா? என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.” (மத்தேயு 12:28-32)
"மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்."