கன்னி மரியா எருசலேம் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் இந்த திருநாள், நவம்பர் 21ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. திருச்சபை விழாக்களின் பட்டியலில் பொது நினைவாக இது இடம் பெற்றுள்ளது.
பின்னணி
நெடுங்காலமாக மகப்பேறின்றி இருந்த மரியாவின் பெற்றோர், தங்களுக்கு குழந்தை பிறந்தால் அதை கோவிலுக்கு அர்ப்பணிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படியே, தங்களுக்கு பிறந்த மரியாவை மூன்று வயதில் எருசலேம் கோவிலில் அவர்கள் அர்ப்பணித்தனர். தலைமைக் குரு மரியாவைத் தூக்கி கோவிலின் மூன்றாவது படியில் விட்டதும், அவளே மற்றப் படிகளில் தானாக ஏறிச் சென்று கடவுளுக்கு தன்னை அர்ப்பணித்தாள். “நான் ஆண்டவரின் அடிமை” (லூக்கா 1:38) என்ற மரியாவின் வார்த்தைகள் இங்கு சரியாக பொருந்துகின்றன. இந்நிகழ்வையே இந்த திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது.
கன்னி மரியாவின் அர்ப்பணம்
நாள்:
நவம்பர் 21
வகை:
நினைவு
வரலாறு
1568ஆம் ஆண்டு திருத்தந்தை புனித 5ம் பியுஸ், இந்த திருநாளை விழாக்களின் பட்டியலில் இருந்து நீக்கினார். இதனால், திரெந்து பொதுச்சங்கத்தின் பரிந்துரையில் உருவான நாள்காட்டியில் இந்த விழா இடம் பெறவில்லை. 1585ல், கன்னி மரியாவின் அர்ப்பண விழாவை திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் விழாக்களின் நாள்காட்டியில் மீண்டும் இணைத்தார். 1597ஆம் ஆண்டு, திருத்தந்தை 8ம் கிளமென்ட் இந்த விழா கொண்டாட்டத்தை இரட்டை நிலைக்கு உயர்த்தினார். 1969ல் சீரமைக்கப்பட்ட திருச்சபை நாள்காட்டியில், ‘கன்னி மரியாவின் அர்ப்பணம்’ பொது நினைவாக உள்ளது.