புனித முதலாம் சிக்ஸ்துஸ்

புனித முதலாம் சிக்ஸ்துஸ் (St. Sixtus I), திருச்சபையின் ஏழாவது திருத்தந்தையாக போற்றப்படுகிறார். கி.பி. 117 முதல் 126 வரை ரோம் நகரின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் செயல்பட்டார்.

முன் வாழ்வு

ரோமில் பிறந்தவரான சிக்ஸ்துஸ், இயேசு கிறிஸ்துவின் மேன்மையை அறிந்து கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினார். பிற்காலத்தில், ரோம் திருச்சபையின் மூப்பர்களில் ஒருவராக (குருவாக) இவர் பணியாற்றி வந்தார்.

திருத்தந்தையாக

திருத்தந்தை முதலாம் அலெக்சாந்தரின் இறப்புக்குப் பின்னர் கி.பி. 117ல், இவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டார். ரோமப் பேரரசன் ஹாத்ரியன் காலத்தில் ரோமின் ஆயராக பொறுப்பேற்ற இவர், திருவழிபாடு சார்ந்த சில ஒழுங்குகளை உருவாக்கினார். திருப்பலியில் பயன்படுத்தப் பெறும் திருப்பாத்திரங்களை குருக்கள் மட்டுமே தொட வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தினார். “தூயவர், தூயவர், தூயவர் …” எனத் தொடங்கும் புகழ்ச்சியை இவரே திருப்பலியில் அறிமுகம் செய்தார்.

‘ஞான உணர்வு’ தப்பறையை ஒழிக்க இவர் முயற்சி எடுத்தார். திருத்தந்தையால் திருப்பீடத்திற்கு அழைக்கப்படும் எந்த ஆயரும், திருத்தந்தையின் திருத்தூதுவ மடல் இல்லாமல் திரும்பினால் அவரது மறைமாவட்டத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என இவர் சட்டம் இயற்றினார். கி.பி. 126ல் மறைசாட்சியாக இறந்த முதலாம் சிக்ஸ்துசின் உடல், இத்தாலியின் அலாத்ரி பீடாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

புனித முதலாம் சிக்ஸ்துஸ்

வரிசை:

7

பணி ஏற்பு:

கி.பி. 117

பணி நீப்பு:

கி.பி. 126

திருநாள்:

ஏப்ரல் 6