யோவானிடம் திருமுழுக்கு பெற்ற பிறகு, இயேசு கிறிஸ்து தமது இறையாட்சி பணியைத் தொடங்கினார். தமக்கென்று சீடர்களைத் தேர்வு செய்த அவர், இறையாட்சி பற்றிய நற்செய்தியை பறைசாற்றி வந்தார். அன்னை மரியாவின் தூண்டுதலால் முதல் அற்புதம் செய்த இயேசு, தமது இறைத்தன்மையை வெளிப்படுத்தும் அடையாளமாக அற்புதங்களை தொடர்ந்து பயன்படுத்தினார்.
முதல் அற்புதம்
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.
ஆகையால் மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

“மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்.”
அதிகார போதனை
பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். இயேசுவைப் பற்றிய செய்தி கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது. மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
பாஸ்கா விழா
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
திருமுழுக்கு தேவை
நிக்கதேம் இயேசுவைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்” என்றார். இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்கு பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.