இணைத் திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) என்பது எபிரேயத் திருமுறை பழைய ஏற்பாட்டில் இடம்பெறாத ஏழு நூல்களின் தொகுப்பு ஆகும். அலெக்சாந்திரியத் திருமுறையில் மட்டும் காணப்படும் இந்நூல்கள், சீர்திருத்த சபையினரின் விவிலியத்தில் ஏற்கப்படவில்லை.
அறிமுகம்
இறைமகன் இயேசுவின் வருகைக்குச் சற்றே முற்பட்ட யூத வரலாறு, வாழ்க்கை முறை, சிந்தனை, சமய வழக்கங்கள் முதலியன பற்றிப் பல செய்திகள் இணைத் திருமுறை நூல்களில் இடம் பெற்றுள்ளன. ‘செப்துவாஜிந்த்’ என்ற கிரேக்க மொழிபெயர்ப்பின் அடிப்படையில் உருவான அலெக்சாந்திரியத் திருமுறையில் மட்டும் காணப்படும் இந்நூல்கள், கி.மு. இரண்டு மற்றும் முதல் நூற்றாண்டுகளில் பாலஸ்தீனத்துக்கு வெளியில் தோன்றின.வரலாற்று நூல்கள் பிரிவைச் சேர்ந்த தோபித்து, யூதித்து, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் நூல்களும், ஞான நூல்கள் பிரிவில் உள்ள சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம் நூல்களும், இறைவாக்கினர் நூல்கள் பிரிவோடு இணைந்த பாரூக்கு நூலும் இணைத் திருமுறையில் இடம் பெறும் ஏழு நூல்களாகும். இந்நூல்களைத் தவிர எஸ்தர், தானியேல் நூல்களில் காணப்படும் கிரேக்க இணைப்புகளும் இணைத் திருமுறை என்ற வரையறையில் அடங்கும்.

"பழைய ஏற்பாட்டின் எபிரேயத் திருமுறையில் இடம்பெறாத ஏழு நூல்களின் தொகுப்பே இணைத் திருமுறை."
பின்னணி
தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும் பாலஸ்தீனத்துக்கு வெளியில் தோன்றியவை என்பதால், கி.பி. 90ல் யாம்னியாவில் நடைபெற்ற சங்கத்தில் யூதர்கள் இவற்றை திருமுறை நூல்களாக ஏற்கவில்லை. ஆனால் கிரேக்க விவிலியப் பின்னணியை ஏற்று வளர்ந்த தொடக்க கிறிஸ்தவ சமூகம், அலெக்சாந்திரியத் திருமுறையில் இருந்த பழைய ஏற்பாட்டின் அனைத்து நூல்களையும் புனிதமாகக் கருதியது.கி.பி. 382ல் திருத்தந்தை முதலாம் தமாசுஸ் ஆணையின் பேரில் கூடிய ரோம் சங்கம், அலெக்சாந்திரியத் திருமுறையின் 46 நூல்களையும் பழைய ஏற்பாடாக ஏற்றது. அதுமுதல் இந்த ஏழு நூல்களும் பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியாகவே போற்றப்பட்டன. 16ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த சபையை உருவாக்கிய மார்ட்டின் லுத்தர் இந்நூல்களை விவிலியத்தைச் சேர்ந்தவையாக ஏற்கவில்லை. 1534ல் அவர் வெளியிட்ட ஜெர்மன் விவிலிய மொழிபெயர்ப்பில், இவற்றைப் பழைய ஏற்பாட்டின் இறுதியில் ‘மறைவு நூல்கள்’ (Apocrypha) என்னும் தலைப்பின்கீழ் வெளியிட்டார்.
திரெந்து பொதுச்சங்கத்தில் இது குறித்து விவாதித்த கத்தோலிக்கத் திருச்சபை, தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும் பழைய ஏற்பாட்டின் மற்ற நூல்களை போன்றே ‘இறை ஏவுதலால் எழுதப்பட்டவை’ என 1546ல் அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டது. ஆகவே, இந்த ஏழு நூல்களும் ‘இணைத் திருமுறை நூல்கள்’ எனப் பெயர் பெறுகின்றன. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் (1962-65) இந்த நிலைப்பாட்டை உறுதி செய்தது. விவிலியப் பொது மொழிபெயர்ப்பில் இவை பழைய ஏற்பாட்டின் இறுதியில் இடம் பெற்றுள்ளன.