பெர்நார்துவின் செபம் (Memorare) என்பது, 14ஆம் நூற்றாண்டில் புனித கன்னி மரியாவின் உதவியை வேண்ட பிரான்ஸ் நாட்டில் தோன்றிய செபம் ஆகும். 17ஆம் நூற்றாண்டில் இந்த செபத்தை மக்களிடையே பரப்பிய குருவான கிளாவ்தே பெர்நார்து என்பவரின் பெயரால் இது அறியப்படுகிறது. செபமாலை பக்தி முயற்சியின் இறுதியில் இந்த செபம் சொல்லப்படுகிறது.
செப வடிவம்
மிகவும் இரக்கமுள்ள தாயே, இதோ உமது பாதுகாவலை நாடிவந்து, உமது உதவியை இரந்து கேட்ட ஒருவராகிலும், உம்மால் கைவிடப் பெற்றதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியரில் சிறந்த கன்னியே, என் தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் தூண்டப்பட்டு, உம் திருமுன் அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து அழுது நிற்கிற பாவியாகிய நான், உம் இரக்கத்தை எதிர்பார்த்து உமது சமூகத்திலே நிற்கிறேன். மனுவுடல் ஏற்ற வாக்கானவரின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கனிவோடு கேட்டு பதில் அளித்தருளும். ஆமென்.
"மிகவும் இரக்கமுள்ள தாயே, உமது உதவியை இரந்து கேட்ட ஒருவராகிலும், உம்மால் கைவிடப் பெற்றதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேட்டதில்லை என்பதை நினைத்தருளும்."