“பாவ மன்னிப்பை நம்புகின்றேன்” (I believe in the forgiveness of sins) என திருத்தூதர்களின் ஏற்கையின் 10ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கையும் ஏற்றுக்கொள்கின்றேன்” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.
திருச்சபையின் அதிகாரம்
பாவங்களை மன்னிக்கும் பணியையும், அதிகாரத்தையும் திருச்சபை கொண்டுள்ளது; ஏனெனில், “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” (யோவான் 20:22-23) என்று கூறி, அதற்கான அதிகாரத்தை கிறிஸ்துவே திருத்தூதர்களுக்கு வழங்கினார். ‘திருத்தூதர்களை அடித்தளமாக’ (எபேசியர் 2:20) கொண்டு கட்டப்பட்டுள்ள திருச்சபை, அவர்களின் வழித்தோன்றல்களான ஆயர்கள் வழியாக கற்பிக்கப்பட்டும், புனிதப்படுத்தப்பட்டும், வழிநடத்தப்பட்டும் வருவதால், பாவ மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை தன்னிலே கொண்டுள்ளது.
அருளடையாளங்கள்
பாவ மன்னிப்பு பெற, திருமுழுக்கு முதலும் முக்கியமுமான அருளடையாளமாக விளங்குகிறது. “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத்தேயு 28:19) என்று கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறார். ஏனெனில், “எல்லா மனிதரும் மீட்பு பெறவும், உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்” (1திமொத்தேயு 2:4). திருமுழுக்கிற்குப் பிறகு செய்யப்படும் பாவங்களுக்கு மன்னிப்பு பெற ஒப்புரவு அருளடையாளத்தை கிறிஸ்து நிறுவினார். இதன் வழியாக, திருமுழுக்கு பெற்றவர் கடவுளோடும் திருச்சபையோடும் ஒப்புரவாகிறார்.