தனித் தீர்ப்பு
ஒருவரது இறப்பிற்குப் பிறகு உடனே தொடங்குகின்ற வாழ்வே ‘நிலை வாழ்வு’ எனப்படுகிறது. கிறிஸ்து வழங்கும் தனித் தீர்ப்பில் இருந்து முடிவற்ற நிலை வாழ்வு தொடங்குகிறது. தனித் தீர்ப்பு என்பது இறந்தவுடன் ஒவ்வொரு மனிதருக்கும் கைம்மாறு அளிக்கின்ற தீர்ப்பாகும். ஒவ்வொருவரும் தம் நம்பிக்கைக்கும் செயல்களுக்கும் ஏற்றக் கைம்மாற்றினை கடவுளிடமிருந்து தமது அழியாத ஆன்மாவில் பெற்றுக்கொள்வார்கள். உடனடியாகவோ, தகுந்த தூய்மையாக்கலுக்குப் பிறகோ, விண்ணகப் பேரின்பத்தை அல்லது நரகத்தின் முடிவில்லாத தண்டனையை அடைவதில் அது அடங்கும்.பொதுத் தீர்ப்பு
பொதுத் தீர்ப்பு என்பது நிலையான பேரின்பத்திற்கோ, முடிவில்லாத தண்டனைக்கோ வழங்கப்படும் தீர்ப்பு ஆகும். உலகத்தின் முடிவில் ஆண்டவர் இயேசு வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராக வரும்போது, “நேர்மையாளருக்கும் நேர்மையற்றோருக்கும்” (திருத்தூதர் பணிகள் 24:15) இத்தீர்ப்பை வழங்குவார். “ஆசி பெற்றவர்களே, வாருங்கள்” (மத்தேயு 25:34) அல்லது “சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள்” (மத்தேயு 25:41) என்ற வார்த்தைகளில் அவரது தீர்ப்பு அடங்கியுள்ளது. பொதுத் தீர்ப்புக்குப் பிறகு, தனித் தீர்ப்பில் மனித ஆன்மா ஏற்கண்டவே கைம்மாறாகப் பெற்றுக்கொண்ட வெகுமதியிலோ தண்டனையிலோ உயிர்த்த உடல் பங்குபெறும். பொதுத் தீர்ப்பு நடைபெறும் நாளையும் நேரத்தையும் கடவுள் மட்டுமே அறிவார்.இறையாட்சியின் முழுமை
பொதுத் தீர்ப்புக்குப் பிறகு, உலகம் முழுவதும் அழிவிற்குரிய அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்துவின் மாட்சியில் பங்குபெறும்; “புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும்” (2பேதுரு 3:13) தொடங்கும், அப்போது இறையாட்சி முழுமை பெரும். அதாவது “விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும்” (எபேசியர் 1:10) என்ற கடவுளின் மீட்புத் திட்டம் உறுதியாய் மெய்மையாகும். அந்த நித்திய வாழ்வில் “கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்” (1கொரிந்தியர் 15:28).